Saturday, September 21, 2013

கூட்டைப்பிள...., குருவிபோல் பற....

"சாலை கற்றுத்தருகிறது " மற்றும் "தயக்கம் தவிர்ப்பீர் " என்ற இரு கட்டுரைகளைப்படிக்க நேர்ந்தது  (இந்து - தமிழ் ) இன்று.  படிக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.


இருவேறு கட்டுரைகள் ஆயினும் இரண்டிலும் சொல்லப்பட்ட கருத்துகளில் பல ஒற்றுமைகள் உண்டு.  'அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா......' பாடல் கேட்டிருக்கிறீர்கள் இல்லையா ?  பூமியும் வானமும் அள்ளியும் தரும், சொல்லியும் தரும், நாம் தயக்கதைத்தவிர்த்து சாலையில்   இறங்கினால் மட்டுமே.  ஒரு பொறி மனத்தில் அடித்தவுடன் செய்துகொண்டிருக்கும் எந்த வேலையையும் கைவிட்டு அல்லது குறைந்தபட்சம் ஒத்திப்போட்டு வேட்டியை வரிந்து கட்டி சாலையில் இறங்குவதற்கு தைரியம் வேண்டும்.  



இறங்கும் முயற்சியையே கைவிடுவதற்கு அல்லது தள்ளிப்போடுவதற்கு ஆயிரம் நியாங்களையும் சால்ஜாப்புகளையும் நம்முன் வரிசைப்படுத்தும், மனம் என்னும் பிசாசு. குழந்தையின் முன் பலவண்ண மிட்டாய்களை வரிசைப்படுத்தி வசியம் பண்ணுவதுபோல.  'இப்போது எப்படி முடியும்?...',  'பிறகு பார்த்துக்கொள்ளலாமே ......', 'ரிடயர்மண்டுக்குபிறகுதான் நேரம் நிறையக்கிடைக்குமே...', 'லீவ் எடுத்தால் மேனேஜர் முசுடு திட்டுவாரே ...', 'அடுத்தவாரம் மைத்துனியின் மகள் கல்யாணம் முடிந்தபின் போகலாம்....'  - வரிசையாக வண்ண வண்ண மிட்டாய்கள்.



மிகச்சுலப வழி,  ஏதாவது ஒரு மிட்டாயை எடுத்து வாயில் போட்டுக்கொள்வதுதான்.

ஒத்திப்போடுவதுதான் ஒத்த தீர்வு.  தள்ளிபோடுவதுதான் தலைசிறந்த ஆயுதம்.  சிகரெட்டை விடும் முயற்சியைப்போலத்தான் சாலையில் இறங்கத்தீர்மானிப்பதும்.  '... புது வருடம் பிறந்தவுடன் விடுவோம் ....'  'அடுத்தமாதம் விடுவோம்...' 'இன்று மட்டும் ஒன்று, நாளை முதல் இல்லை...' 


காரணம், பயம்.  தயக்கம்.  மாற்றத்தை எதிர்கொள்ள பயம்.  இப்போதிருப்பதே சுகமாக இருக்கிறது.  இப்படி இருப்பதே பாதுகாப்பாக இருக்கிறது.  எதற்கு மாற்றம் ?  ஏன் இந்த வெட்டி முயற்சி?  கமல் சொல்வது போல், ஆயிரம் பயம்.  நிற்க பயம், உட்கார பயம், பயம், பயம்......



இந்த பயத்தின் சுனாமியிலிருந்து மீண்டு சாலையில் இறங்குவது எப்போது? அலுவலகத்திற்கும், வீட்டிற்கும், குடும்பதிற்கும் அப்பால் உள்ள உலகத்தைக்காணுவது எப்போது?  தள்ளிப்போட தள்ளிபோட நீண்டு கொண்டே போகும் அளவிற்கு வாழ்க்கை இழுக்க இழுக்க நீளும் ஜவ்வு மிட்டாய் இல்லையே.  மரணம் என்று? என்று தெரியாத வரை சாவே இல்லை என்கிற குருட்டு நம்பிக்கை தயங்கச் சொல்கிறது.  தள்ளிப்போடச் சொல்கிறது.  தேதி தெரிந்துவிட்டால் என்ன சௌகரியம்!  தெரிந்த நாளிலிருந்தாவது வாழத் தொடங்கலா மே, தேதி முடியும் வரை! அள்ளித்தர பூமியிருக்கிறது, கை நிறைய அள்ளலாமே!  சொல்லித்தர வானமிருக்கிறது, சுகமாக கற்கலாமே !  



சாலையில் இறங்கும் சாகசம் பெறலாமே!  நண்பா, இன்னும் தயக்கமென்ன!





No comments:

Post a Comment